சனி, 2 டிசம்பர், 2017

அன்புள்ள? ரஜினிகாந்த்....

அன்புள்ள?  ரஜினிகாந்த்

வணக்கம்  தாங்கள்  இலங்கை  செல்ல  இருந்தது  மற்றும்  இங்குள்ள  அரசியல்வாதிகள்  எதிர்ப்பால்  அந்தப்  பயணத்தை  ரத்து  செய்தது  தொடர்பாக  மூன்று  பக்கங்களில்  உங்களை  நீங்களே  அடையாளப்படுத்தியுள்ளீர்கள்  மகிழ்ச்சி

பொதுவாக  உங்கள்  படம்  வெளிவரும்  சமயங்களில்  ஒரு  பரபரப்பை  உருவாக்குவது  உங்களுக்கு  ஒன்றும்  புதிதல்ல  அதே  இத்துப்போன  பாலிசியைத்தான்  இப்போதும்  கையாளுகிறீர்கள்  உங்கள்  நலம்  விரும்பிகள்  யாரும்  இதுபற்றி  உங்களிடம்  கூறி  வேறு  யுக்திகளைக்  கையாளச்சொல்லவில்லையா  பாவம்  பழைய  எந்திரன்  நீங்கள்

என்னை  வாழவைக்கும்  தமிழ்  மக்களுக்கு  என்னுடைய  அன்பான  வணக்கம்  என்று  அறிக்கையை  துவங்குகிறீர்கள்  அந்த  வாழவைத்த  தமிழன்  அரைநிர்வாணமாக  கடந்த  13  நாட்களாக  பசியும்  பட்டினியுமாக  டெல்லியின்  வெட்ட  வெளியில்  கிடந்து  போராடுகிறான்  அவனைப்பற்றி  உங்கள்  மோடியிடம்  என்ன  பேசினீர்கள்  தெரிந்து  கொள்ளலாமா?

லைக்கா  முதலாளி  சுபாஷ்கரன்  வவுனியாவில்  150  வீடுகளைக்  கட்டித்  தருவதாகச்  சொல்கிறீர்கள்  அந்த  லைக்காவின்  பின்னனி  உங்களுக்குத்தெரியாதா  இடித்தவர்களே  கட்டித்தருவதில்  உள்ள  உலக  அரசியலும்  நில  அரசியலும்  உங்களுக்குத்  தெரியாதா?

அவர்  கருணை  உள்ளம்  கொண்டவர்  என்று  வர்ணிக்கிறீர்கள்  அது  உங்களுக்குக்  கிடைத்த  சம்பளத்தின்  அடிப்படையிலான  வார்த்தை  என்று  வைத்துக்  கொள்ளலாமா  ஏனெனில்  இனப்படுகொலை  நிகழ்த்திய  குழுவிலிருக்கும்  ஒருவன்  கருணையாளனாக  வாய்ப்பில்லை  அல்லவா?

ஏப்ரல்  10  ம்  தேதி  வவுனியா  சென்று  பயனாளிகளுக்கு  வீடுகள்  வழங்கி  மரக்கன்றுகள்  நட  இருந்ததாக  எழுதுகிறீர்கள்  யாரைப்  பயனாளி  என்கிறீர்கள்  சிங்கள  இனவெறியர்களால்  கட்டிவைத்து  கற்பழிக்கப்பட்டு  பாலுறுப்புகள்  சிதைக்கப்பட்டு  கொல்லப்பட்டவர்களின்  உறவினர்களையா?

பள்ளிக்குச்சென்று  பாடம்  படிக்கையில்  கொத்துக்குண்டுகளுக்கு  கொத்துக்கொத்தாக  இரையாகிய  பிள்ளைகளின்  பெற்றோர்களையா?

வெள்ளைக்கொடி  ஏந்திவந்து  சமாதானக்கோட்டிற்குள்  தஞ்சம்  புகுந்த  பின்  சித்திரவதை  செய்யப்பட்டு  கொலை  செய்யப்பட்டு  வெட்ட  வெளியில்  வல்லூருகளுக்கு  உணவாகிய  தமிழர்களின்  குடும்பத்தையா?  யாரைப்  பயனாளி  என்கிறீர்கள்?

மரங்களை  எங்கே  நடப்போகிறீர்கள்  கொடியவர்களின்  ஆயுதங்களால்  சிதறடிக்கப்பட்ட  மனிதர்களின்  குருதியும்  சதையும்  எலும்பும்  மக்கி  உரமாகிப்போன  மண்ணிலா  ?

முல்லைத்தீவையும்  கிளிநொச்சியையும்  பார்வையிடப்போவதாகச்  சொல்கிறீர்கள்  தமிழகத்தின்  ஈழ  உறவுகள்  முடங்கிக்  கிடக்கின்ற  ஏதாவது  ஒரு  முகாமிற்குச்  சென்று  அவர்களில்  வாழ்நிலைபற்றி  அறிந்து  வந்தருக்கிறீர்களா  அவர்களின்  முன்னேற்றத்திற்கு  ஒரு  துரும்பையாவது  உங்கள்  ஆதரவுபெற்ற  அரசுகளிடம்  கிள்ளிப்போட்டிருக்கிறீர்களா?  இல்லையெனில்  முல்லையிலும்  நொச்சியிலும்  என்ன  பார்வையிடவேண்டிக்கிடக்கிறது  உங்களுக்கு?

//தங்களின்  இனத்துக்காக  தங்களின்  உரிமைக்காக  தங்களது  சுய  கௌரவத்திற்காக  லட்சக்கணக்கில்  ரத்தம்  சிந்தி  மடிந்து  தங்களைத்தாங்களே  சுயசமாதியாக்கிக்கொண்டு  பூமிக்குள்  புதைந்து  கிடக்கும்//  ஆஹா  ஆஹா  என்னே  வார்த்தை  ஜாலங்கள்  எழுதித்தந்தவருக்கு  மோதிரம்  போடலாம்  அதென்ன  தங்களைத்தாங்களே  சுய  சமாதியாக்கிக்கொண்டு  அதெப்படி  உங்கள்  பாபாக்கள்  ரிஷிகள்  எல்லாம்  ஜீவசமாதி  அடைவதாகச்  சொல்வீர்களே  அப்படியா  அப்படித்தான்  ஈழத்தமிழர்கள்  லட்சக்  கணக்கில்  மாண்டார்களா  இனப்படுகொலை  என்று  உங்கள்  நண்பர்  கமலஹாசன்  கூடச்  சொன்னார்  எந்திரன்  2.0  வசூல்  முடிந்த  பின்  நேரமிருந்தால்  அவரிடம்  கேட்டுத்  தெரிந்து  கொள்ளுங்கள்

மீனவர்கள்  சுட்டுக்கொல்லப்படுவது  பற்றி  மைத்ரி  பால  சிரிசேனாவுடன்  பேச  இருந்ததாக  கவலைப்படுகிறீர்கள்  அடடா  அடடா  சமீபத்தில்  சுட்டுக்கொல்லப்பட்ட  தம்பி  பிரிட்ஜோவிற்காக  நீதிகேட்டும்  இனி  கொல்லக்கூடாது  என்று  பேச்சுவார்த்தை  நடத்தவும்  புறப்பட்டு  இலங்கை  போயிருப்பீர்களானால்  தமிழ்ச்  சமூகமே  செலவுகளை  ஏற்று  வாழ்த்தி  வழியனுப்பி  வைத்திருக்குமே  ஆமாம்  இதெல்லாம்  பேச  நீங்கள்  யார்?

நான்  அரசியல்வாதியல்ல  என்று  குறிப்பிட்டுள்ளீர்களே  சைக்கிள்  சின்னம்  நினைவிருக்கிறதா  ஜெயலலிதா  ஜெயித்தால்  ஆண்டவனால்  கூட  தமிழ்நாட்டைக்  காப்பாற்ற  முடியாது  என்ற  வசனம்  மறந்துவிட்டதா  பின்  திமுக  தோற்றதும்  தமிழகத்தை  காப்பாற்றிவிட்டீர்கள்  என்கிற  வசனம்  நினைவிருக்கிறதா  ?

ஆர்கே  நகரில்  யாருக்கும்  ஆதரவில்லை  என்று  எந்த  நடிகராவது  அறிக்கைவிட்டாரா  ரஜினியின்  ஆதரவு  ரஜினியுடன்  சந்திப்பு  என்றெல்லாம்  ஒரு  கட்சியை  பேசவிட்டு  வேடிக்கை  பார்த்ததெல்லாம்  அரசியலன்றி  வேறென்ன?

நீங்கள்  மக்களை  மகிழ்விக்கும்  கலைஞன்  மட்டும்தான்  என்று  இப்போதுதான்  உணர்கிறீர்களா  அப்படி  என்றால்  இலங்கை  செல்ல  ஏன்  ஒப்புக்கொண்டீர்கள்  ஆடிப்பாடப்போவதென்றால்  சரி  வீடு  வழங்கவும்  மரம்  நடவும்  மீனவர்  கொலை  பற்றிப்பேசுவதும்  அப்பழுக்கற்ற  அரசியல்  கலக்காத  கலைஞனின்  வேலையா?  அப்படி  அது  உங்கள்  வேலை  என்றால்  நெடுவாசலுக்கும்  ராமேஸ்வரத்திற்கும்  ஏன்  செல்லவில்லை?

ஏதாவது  ஒரு  நிலைப்பாட்டில்  இருங்கள்  அல்லது  ஆல்  இன்  ஆல்  அழகுராஜா  என்று  உங்களை  நீங்களே  அறிவித்துக்கொள்ளுங்கள்  இந்த  நாட்டின்  அரசியல்  பல  அறிஞர்களையும்  பல  கோமாளிகளையும்  சந்தித்துவிட்டது  இங்கு  யாரும்  எதுவும்  புதிதல்ல

உங்கள்  ஒருதுளி  வியர்வைக்கு  ஒரு  பவுன்  தங்கக்காசைப்  பெற்றுக்கொண்டு  ஆன்மீகம்  ஆசை  துறத்தல்  பற்றியெல்லாம்  பேசி  இமயமலையில்  ஓய்வெடுக்க  இதுவரை  சம்பாதித்தது  போதாதெனில்  இன்னும்  எங்களை  மகிழ்வியுங்கள்  நடியுங்கள்  பரபரப்பை  உண்டாக்குங்கள்  சம்பாதியுங்கள்
ஜெய்ஹிந்த்

ஆன்மன்
25/03/17